உங்கள் அனைவரினதும் உத்வேகத்தில் உதித்த உசன் பவுண்டேசனானது தனது முதலாவது மக்கள் மயப்படுத்தப்பட்ட செயற்திட்டமான ஈச்சங்காடு இந்து மயான புனரமைப்புப் பணியை நிறைவுசெய்துள்ளது. இச் செயற்திட்டத்தினால் மயானத்தின் தகனபீடம் அடங்கிய எரிகொட்டகையைச் சுற்றி காப்புச் சுவர் அமைக்கப்பட்டு, மண் அணைத்து உயரமாக்கப்பட்டு, வெள்ள நீர் அச்சுறுத்தலில் இருந்து நிரந்தர தீர்வு பெறப்பட்டுள்ளது. அத்துடன் இப் பிரதேசத்தில் நிழல்தரு மரங்கள் நாட்டப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் இது ஒரு பச்சையீட்டுச் செயற்திட்டமாக மிகச் சிறப்பாக அந்தச் சூழலுக்குப் பொருத்தமான முறையில் வடிவமைக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இத்துடன் சுற்றுப்புறச் சூழலையும் சுத்தமாகப் பேணுவதற்குரிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இச் செயற்திட்டமானது மக்கள் மயப்படுத்தப்பட்டு அமுலாக்கப்பட்டு நிறைவுசெய்யப்பட்டுள்ளது. இதற்கான தோராய மதிப்பீடாக ஒரு மில்லியன் இலங்கை ரூபாக்கள் எதிர்பார்க்கப்பட்டது. எமது நாட்டின் பொருளாதார நெருக்கடி, பொருட்கள், சேவைகளின் கட்டுக்கடங்காத பெறுமதியுயர்வு, பணவீக்கம் முதலான காரணங்களால் எமது தோராய மதிப்பீட்டினைத் தாண்டிய நிலையில் 1,172,801.00 ரூபா செலவீனம் ஏற்பட்டிருந்தது.
இச் செயற்திட்டத்திற்கான உள்ளுர்வாழ் உசன் உறவுகளது பங்களிப்பாக 672,050.00 ரூபா கிடைக்கப்பெற்றதுடன், தன்னார்வமாக புலம்பெயர் தேசத்து உறவுகள் மூவரது பங்களிப்பு 300,186.00 ரூபா இதுவரை கிடைக்கப்பெற்றுள்ளது.
நிதிப் பங்களிப்பானது தனியாக இச் செயற்திட்டத்தின் சரியான செலவீனத்தினை ஈடுசெய்வதற்காக மாத்திரமே மேற்கொள்வது எனவும், இதற்காகச் சேகரிக்கப்படும் நிதியை வேறு தேவைகளுக்குப் பாவிப்பதில்லை என்ற கொள்கைரீதியான தீர்மானத்தின் அடிப்படையிலும் தொடரப்பட்டது.
முதலில் உள்ளுர் மக்களின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்வது எனவும், இச் செயற்பாட்டில் உள்ளுர் மக்களது பங்கேற்பு “எமது” என்ற சிந்தனையை வலுவாக்கும் என்பதை அழுத்துவதாகவே அமைந்திருந்தது. இச் செயற்பாடு பெரு வெற்றியை எமக்கு அளித்திருக்கின்றது. எதிர்பார்க்காதவகையில் சிறப்பான பங்களிப்புடன் ஒரு தொகை உள்ளுரில் கிடைத்திருந்தது. தவிர தன்னார்வமாக இச் செயற்திட்ட பிரேரிப்பினை அறிந்தவர்களாக பொது வெளியில் நிதி திரட்டுகை ஆரம்பிக்கப்படாத நிலையில் மூவரது பங்களிப்புக்கள் கிடைக்கப்பெற்றிருந்தன. இவற்றினை திரட்டியதன் அடிப்படையில் 200,565.00 ரூபா இன்னமும் திரட்டவேண்டிய நிலையில் எமது நிர்வாக குழு செயற்திட்ட நிறைவுச் செய்தியுடன் நிதிக் கோரிக்கையையும் பொது வெளியில் முன்வைக்கின்றது.
இத் தொகை மாத்திரமே இச் செயற்திட்டம் தொடர்பில் பெற்றுக்கொள்ளப்படும். இதனைப் பங்களிக்க விரும்பும் நல் உள்ளங்கள் கீழ்வரும் எமது வங்கிக் கணக்கில் வைப்பிலிடுவதுடன், உங்களது விபரங்களை எமது usanfoundation@gmail.com என்ற மின்னஞ்சலிற்கு அனுப்பிவைக்கவும்.
Account name: Usan foundation society Limited
Bank: Nations Trust Bank
Branch: Jaffna Branch
Swift Code: NTBCLKLX
Account number: 200350097907
மேலும் இம் மயானத்தினை எமது கிராமத்தினை விடவும் தவசிகுளம் ஒருபகுதி, கெற்பேலி மற்றும் பாலாவியின் ஒரு பகுதி அயல் கிராமங்களும் பயன்படுத்துவதால் அவ் விடத்தினைப் பராமரிப்பு செய்வதில் பொது நிலைப்பாட்டினை உருவாக்குவதற்கான நிர்வாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
இம் மயானம் எமது கிராமத்தின் பௌதீக எல்லைக்குள் அமைந்திருப்பதால் அதற்கான உரிமைத்தத்துவமும், தங்குதடையற்ற ஆட்சியும் எமது கிராம மக்களிடம் இருக்கவேண்டும் என்ற அடிப்படையில் மேற்குறித்த பயனர்களிடம் இருந்து எவ்வித பங்களிப்பையும் பெற்றுக்கொள்ளவில்லை.
இவ்வாறான நிலையில் இச்செயற்திட்டம் பூரணப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான செலவீனப்பொழிப்பு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
அனைவரதும் ஒத்துழைப்புக்கு உசன் பவுண்டேசன் சார்பாக மிக்க நன்றிகள்.