ஊரோடு உறாவாடும் அனைத்து உசன் வாழ் உறவுகளுக்கும் அன்பு நிறைந்த வணக்கம்!
உசன் மண்ணிலும், உசனைத்தாண்டி வெளியூர்களில் வாழ்கின்றவர்கள் மற்றும் வெளிநாடுகளில் வாழ்கின்ற எமது உறவுகளை ஒன்றிணைத்து உசனின் வளர்ச்சிக்கு என்று ஒன்றிணைந்து உருவாக்கப்பட்ட USAN Foundation முதன்முறையாக அனைவரையும் ஒருங்கிணைத்து இணையவழியில் ஒரு கலைநிகழ்வினை நடாத்தத் திட்டமிட்டுள்ளது.
இப்படியான இணையவழி நிகழ்வொன்றை உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா கடந்த மூன்றுவருடங்களுக்கு முன் நடாத்தியது பலர் அறிந்தவிடையம். உண்மையில் அதில் பலர் கலந்துகொண்டாலும் இன்னும் பலருக்கு பலத்த ஏமாற்றமாகத்தான் பின்நாட்களில் உரையாடுகின்றபோது கவலைப்பட்டார்கள். எனக்குத்தெரியாமல் போய்விட்டது என்றும், அன்றையதினம் வேலையில் விடுமுறை எடுக்கமுடியாமல் போனதென்றும் மிகவும் ஆவலாக ஆதங்கப்பட்டார்கள்.
அதனால் இத்தகையசந்தர்பத்தைத் தவறவிடாமல் உங்களுக்குத்தெரிந்த எமது உறவுகளைத் தொடர்புகொண்டு அவர்களுக்கு எப்படி இதில் கலந்துகொள்ளலாம் என்பதைக் கணினியில் காட்டிக்கொடுத்துக் கூட்டிவாருங்கள்.
இன்றும் எமது முதியோருக்கு இப்படியான சந்தர்பங்களில் பங்குகொள்ள ஆவல் இருந்தும் நடைமுறையில் பல சிக்கல்கள் இருக்கின்றன. அவற்றை அவர்களின் பேரப்பிள்ளைகளின் உதவியோடு கைகோர்த்துக் கூட்டிவாருங்கள்.
மேலும் இத்தகைய இணையவழியானது இரண்டாவது சந்தர்பம். இதை நழுவவிடாதீர்கள். வாருங்கள், வாருங்கள் உங்கள் முகங்களையும், உங்கள் ஆக்கங்களையும், உங்கள் பிள்ளைகளின் ஊக்கங்களில் உருவான கலை வடிவங்களையும் குறைந்தநேரத்தில் செயல்படுத்தும் வகையில் கொண்டுவாருங்கள்.
இந் நிகழ்வானது எதிர்வரும் 11.03.2023 அன்று இலங்கை நேரப்படி மாலை 4.30 மணிக்கு இடம்பெற ஏற்பாடாகியுள்ளது. இந் நிகழ்வுகள் அனைத்தும் இரண்டு மணி நேரங்களுக்குள் மட்டுப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
கலை நிகழ்ச்சிகள் வழங்க ஆர்வமுள்ளவர்கள் பின்வரும் மின்னஞ்சல்களுக்குத் தங்களது விபரங்களை 28.02.2023 க்கு முன்னர் அனுப்பிவைத்து ஒத்துழைக்கும் வண்ணம் தயவுடன் வேண்டிக்கொள்ளப்படுகின்றீர்கள்.
usanfoundation@gmail.com
secretary@usan.ca
நிகழ்ச்சிகளை வழங்க எதிர்பார்ப்பவர்கள் பின்வரும் சில விடயங்களில் கவனத்தினை செலுத்தி ஒருங்கிணைப்பு, செயன்முறை ஒழுங்குகளுக்கு ஒத்துழைக்கும் வண்ணம் பணிவாக வேண்டப்படுகின்றீர்கள்.
1. தனி அல்லது குழு நிகழ்வுகளின் நேர அளவு 4 நிமிடங்களுக்குள் அடங்குவாதாக இருத்தல் வேண்டும்.
2. ஆயத்த நடவடிக்கைகள், காணொளிப் பகிர்வின் தரம் முதலியவற்றின் தரச்சிறப்பு தொடர்பில், நடைமுறைச் சாத்தியங்களின் அடிப்படையில், பதிவு செய்யப்பட்ட காணொளிகளாக அனுப்பிவைக்கப்படுவது சிறந்ததாக எதிர்பார்க்கப்படுகின்றது.
3. நேர முகாமைத்துவத்தினை கருத்திற்கொண்டு மிகவும் நேர்த்தியான நிகழ்ச்சி நிரலினைத் தயாரிக்க எதிர்பார்ப்பதால், நிகழ்வுகள் கிடைக்கப்பெறும் ஒழுங்கிலேயே வரிசைப்படுத்தப்படும். அதற்கு அமைவாக இயன்றவரை தாமதமின்றி நிகழ்வுகளை அனுப்பிவைத்து அந் நிகழ்ச்சிகள் உள்வாங்கப்படுவதற்கு ஒத்துழைக்கவும்.
4. தாமதமாக மற்றும் அதிகரித்த எண்ணிக்கையான நிகழ்வுகள் கிடைக்கப்பெறும் சந்தர்ப்பத்தில் நிகழ்வுகளின் எண்ணிக்கையை வரையறுக்கவேண்டிய நிலை உருவாகலாம்.
ஆவலுடன் காத்திருக்கின்றோம். தங்கள் அத்தனைபேரினதும் ஒத்துழைப்பிற்கு மிக்க நன்றி.
இத்தகையசந்தர்ப்பத்தில்தான் நாம் எமது உறவுகளைச் சந்திப்பதோடு எமது ஊரின் கட்டுமாணங்களையும், அதற்கான தேவைகளையும், அதன் இன்றைய வளர்சியையும், நாளைய தேவைகளை எப்படி ஈடுசெய்து கொள்ளலாம் என்பதையும் எங்களுக்குள் மனம் திறந்து உரையாடிக்கொள்ள முடியும்.
வாருங்கள், வாருங்கள் வாருங்கள்…....
நன்றி.
நிர்வாகக் குழு
USAN Foundation