அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Saturday, July 30, 2022

அன்பார்ந்த உறவுகளே!


கடந்த 2022.07.10 அன்று Neilson park இல் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் கனடாவின் கோடை கால ஒன்றுகூடலும், நிர்வாகசபைத் தெரிவும் இடம்பெற்றன. இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள். 

அன்றைய தினம் வழமை போல் Roast பாண், சம்பல், வடை, தேநீர் போன்ற காலை உணவுடன் ஒன்றுகூடல் சிறப்பாக ஆரம்பமானது.

காலையிலேயே நிர்வாக சபை உறுப்பினர்கள் வந்திருந்து தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டிருந்தார்கள். முற்பகல் 11 மணியளவில் உசன் மக்கள் வந்து சேர ஆரம்பித்தார்கள்.  பிற்பகல் 1 மணியளவிலேயே பொதுக்கூட்டத்தை ஆரம்பிக்குமளவுக்கு மக்கள் வந்துசேர்ந்தார்கள்.

பொதுக்கூட்டம் பகல் 1 மணியளவில் ஆரம்பமாகியது. பிரதம விருந்தினராக Norway ல் இருந்து வந்திருந்த திரு. திருமதி சபேசன் நல்லதம்பி அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.  சிறப்பு விருந்தினராக இந்த வருட நிகழ்வின் பிரதம அனுசரணையாளரான Real Estate Agent & Mortgage Agent, திரு. திருமதி கேதீஸ்வரன் அவர்கள் கலந்து மகிழ்வித்தார்கள்.  இவர்கள் மங்கல விளக்கையேற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.

வரவேற்புரை மற்றும் தலைமையுரையைத் தொடர்ந்து, சென்ற ஆண்டு கூட்ட அறிக்கை மற்றும் கணக்கறிக்கை ஆகியன சமர்ப்பிக்கப்பட்டு சபையால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.

மிகவும் குறைவான மக்களே ஒன்றியத்தில் அங்கத்தவர்களாக இருப்பதைக் கவலையோடு சுட்டிக்காட்டிய தலைவர் மேலும் அங்கத்தவர்களைச் சேர்த்துத் தருமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.  அத்தோடு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா கடந்த 6 வருடங்களில் கிட்டத்தட்ட 50 இலட்சம் ரூபா பெறுமதியான சேவைகளைச் செய்து முடித்துள்ளதாக விபரங்களைத் தெரிவித்தார்.  அத்தோடு உசன் அபிவிருத்திக்காக உலகளாவிய உசன் கட்டமைப்புக்கு இதுவரை சேர்க்கப்பட்ட 30 இலட்சம் ரூபாவின் பெரும்பகுதி உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவாலேயே சேர்க்கப்பட்டதையும் சுட்டிக் காட்டினார்.

தொடர்ந்து தற்போதைய நிர்வாகசபையின் பதவிக் காலம் முடிவுக்கு வருவதால் புதிய நிர்வாகசபைத் தெரிவு இடம்பெற்றது.

அதனைத்தொடர்ந்து மதிய உணவாக Barbecue, குழைசாதம், pasta வுடன் இம்முறை விசேடமாக கீரைப்பிட்டும், அப்பமும் பரிமாறப்பட்டது. அனைத்து உணவு வகைகளையும் அனைவரும் இரசித்து உண்டார்கள் என்பதில் ஐயமில்லை. தொடர்ந்து விளையாட்டுப் போட்டியும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. 

மாலையில் கோப்பியும் cake ம் பரிமாறப்பட்டது. இறுதியில் எமது விசேட இரவு உணவான கொத்துரொட்டி அனவருக்கும் வழங்கப்பட்டது. 

இவ்வருடம் இதுவரை உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவில் புதிதாக 5 உறுப்பினர்கள் மாதாந்த அங்கத்துவம் மூலம் இணைந்துள்ளார்கள். மேலும் மூவர் வருடாந்த சந்தாவான $120 ஐ செலுத்தித் தங்கள் அங்கத்துவத்தைப் புதுப்பித்துள்ளார்கள். புதிய அங்கத்தவர்களை உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா இன்முகத்தோடு வரவேற்கிறது.

கணிசமான அளவு இளையவர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டது நிகழ்வுக்கு மேலும் சிறப்பூட்டியது.  அத்தோடு விடத்தற்பளை மக்கள் ஒன்றியம் - கனடாவின் பிரதிநிகளும் கலந்துகொண்டு மதிப்பளித்தார்கள்.

இந்த நிகழ்வுக்குப் பலர் அனுசரணையும், அன்பளிப்பும் வழங்கியிருந்தார்கள்.
திரு. கேதீஸ்வரன் இராசையா (Trophies)
திருமதி சாந்தினி சிவானந்தன் (Lottery prize)
திருமதி ரஜனி மதீஸ்வரன் (Lottery prize) 
திரு. அந்தனி பொன்ராஜா (Mortgage Agent)
திரு. உதயகுமார் நடராஜா (தலைவர், விடத்தற்பளை மக்கள் ஒன்றியம் - கனடா)
திரு. பிரதீபன் சண்முகநாதன் (பொருளாளர், விடத்தற்பளை மக்கள் ஒன்றியம் - கனடா)
திரு. ஜெயக்குமார் சோமசுந்தரம் (உப செயலாளர், விடத்தற்பளை மக்கள் ஒன்றியம் - கனடா) 
திரு. ஜீவராஜா பொன்னம்பலம் (ஜீவன், Niru Brand)
திரு. கருணானந்தன் வினாசித்தம்பி (JBN Auto) 
திரு. திருகரன் சின்னத்துரை

ஆதரவு நல்கிய அனைவருக்கும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.

ஒளிப்படங்களைப் பார்ப்பதற்கு usanpeople என்ற FaceBook தளத்திற்குச் செல்லவும்.


Thursday, July 14, 2022

அரங்கேற்றம்!



பாரதி இந்திய சாஸ்திரிய நடனக் கல்லூரி அதிபர், பரதகலா வித்தகர், நாட்டிய சிரோன்மணி ஸ்ரீமதி சியாமா தயாளன் அவர்களின் மாணவி துர்க்கா சிவகுமார் அவர்களின் பரத நாட்டிய அரங்கேற்றம் ஞாயிற்றுக்கிழமை, July 17, 2022 அன்று 10268 Yonge Street, Richmond Hill, L4C 3B7, ON, Canada என்ற முகவரியில் அமைந்திருக்கும் Richmond Hill Center for the Performing Arts மண்டபத்தில் இடம்பெற உள்ளது.

மாலை 4 மணிக்கு சிற்றுண்டிகள் வழங்கப்படும்.  அரங்கேற்றம் சரியாக மாலை 5 மணிக்கு ஆரம்பமாகும்.  

பெருந்தொற்றுக்குப் பின்னதான முதலாவது அரங்க நிகழ்வாக இது அமையவிருக்கிறது.  இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு சியாமா தயாளன் அவர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறார்.

துர்கா சிவகுமாருக்கு வாழ்த்துகள் கூறும் அதேவேளை இந்த அரங்கேற்றம் சிறப்பாக நடந்தேற உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா வாழ்த்தி நிற்கிறது.





Thursday, July 7, 2022

துயர் பகிர்வு – அமரர் தங்கம்மா நடராஜபிள்ளை


யாழ் உசன் மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி தங்கம்மா நடராஜபிள்ளை அவர்கள் 2022.07.05 அன்று இயற்கை எய்தினார்.

அன்னார் காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை சின்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற அருளம்பலம் நல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

நடராஜபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

சின்னத்துரை, காலஞ்சென்ற சதாசிவம், சோதீஸ்வரி, சிவபாலன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜனார்த்தனன் (ANJ BROS PVT LTD), ஜதுர்ஸன் (உள்ளுராட்சி திணைக்களம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவதீபாவின் (பதிவாளர் நாயகம் திணைக்களம்) அன்பு மாமியாரும், 

ஆகில்யனின் அப்பம்மாவும் ஆவார். 

அன்னாரின் இறுதிக் கடமைகள் 2022.07.05 உசனில் நடைபெற்று மதியம் 12.30 மணியளவில் ஈச்சங்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல் - குடும்பத்தினர். 

அன்னாரின் பிரிவால் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா கவலைகொள்வதுடன், அவரது ஆத்மா சாந்தியடையப் பிரார்த்தித்துக்கொள்வதுடன், பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றது.