November 6 ஆம் திகதி இடம்பெற்ற "உசன் ஒருங்கிணையம்" Zoom செயலி வழி ஒன்றுகூடலில் முன்வைக்கப்பட்ட உசன் முன்னேற்றத்துக்கான ஒரு பொதுக் கட்டமைப்பு என்ற கருப்பொருளுக்கு வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. January 22, 2022, சனிக்கிழமை கனடா நேரம் காலை 7 மணியளவில் உசனுக்கான பொதுக்கட்டமைப்பு ஒன்றை அமைப்பதற்கான முதலாவது கூட்டம் ஏற்கனவே அறிவித்தபடி உலகமெங்கும் பரந்துபட்டு வாழ்கின்ற உசன் உறவுகளோடு இணையவழியூடாக இடம்பெற்றது.
இந்தக் கூட்டத்திலேயே "உலகளாவிய உசன் கட்டமைப்பு" (Usan Global Forum) என்ற இந்தக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் முதலாவதாக அகவணக்கம் இடம்பெற்றது. தொடர்ந்து திரு. பாஸ்கரன் ஆர்வமாகக் கலந்துகொண்ட அனைவரையும் வரவேற்றுக் கொண்டார். மேலும் பொதுக்கட்டமைப்புத் தொடர்பாக இதுவரை என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதையும் தெரிவித்துக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து நோர்வேயில் இருந்து திரு. ஜெயதேவன் இந்த உசன் பொதுக்கட்டமைப்பின் நோக்கம் மற்றும் செயற்பாடுகள் என்பது பற்றிய சிறு விளக்கத்தை அளித்தார்.
இதுவரைகாலமும் திரு. பாஸ்கரன் அவர்களுக்கும் உசன் கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் திரு. ஜதுசன் அவர்களுக்குமிடையே இந்தக் கட்டமைப்புத் தொடர்பாக இருந்துவந்த தொடர்பாடல்கள் பற்றிய விபரங்கள் பரிமாற்றப்பட்டதோடு திரு. ஜதுசன் மற்றும் ஊரின் பற்றாளர்களின் உறுதுணையோடு ஊரில் இருக்கின்ற ஏனைய அமைப்புகளையும் இந்தப் பொதுக்கட்டமைப்பில் சேர்த்துக்கொள்ள எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான விளக்கத்தோடு கூட்டமானது தொடர்ந்தது.
இதைத்தொடர்ந்து திரு. ஜதுசன் அவர்களால் வரையப்பட்ட மாதிரி யாப்பு மற்றும் செயற்பாட்டு வழிகாட்டுதல்கள் ஆகியவற்றின் சாரங்கள் ஆராயப்பட்டன. இந்த ஆவணங்களில் செய்யப்படவேண்டிய மாற்றங்கள், திருத்தங்கள் அல்லது மேலதிகமாகச் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டிய சரத்துகள் பற்றிய ஆலோசனை, கூட்டத்தில் பங்குபற்றியவர்களிடம் கேட்கப்பட்டது. இந்த ஆலோசனைகளை ஆராய்ந்து தேவையான மாற்றங்களைச் செய்து மேம்படுத்தப்பட்ட மாதிரி ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்காக உப குழு ஒன்று தெரிவு செய்யப்பட்டது. திருவாளர்கள் ஜதுசன் (இலங்கை), ஜெகன் (பிரித்தானியா) மற்றும் ஜெயதேவன் (நோர்வே) ஆகியோரே இந்த உப குழுவின் அங்கத்தினராவார்கள். மாற்றங்கள் மற்றும் திருத்தங்கள் என்பவற்றை வருகின்ற January 29, 2022 க்குள் சமர்பிக்கவேண்டுமெனச் சபையோரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து மேம்படுத்தப்பட்ட ஆவணங்களை உப குழு சபையின் முவைத்து ஒப்புதல் பெறப்படும்.
அடுத்து, உசனுக்கான பொதுக்கட்டமைப்பின் தொடர்பாளராக திரு. ஜதுசன் அவர்களை திரு. பாஸ்கரன் முன்மொழிய, அதை திரு. ஜெயதேவன் அவர்கள் வழிமொழிய சபை ஏற்றுக்கொண்டது.
அடுத்து பிரித்தானியாவில் இருந்து திரு. ஜெகன் அவர்கள் இந்தக் கட்டமைப்பின் நிதி சம்பந்தமாகவும் செயற்பாட்டு உறுப்பினர்களின் பதவிக் காலம் தொடர்பாகவும் தனது கருத்துகளை முன்வைத்தார். நிதி சேகரிப்பு நடவடிக்கையொன்றை சரியான நேரத்தில் செய்து வரும் நிதியை இலங்கையில் நிரந்தர வைப்புக் கணக்கில் வைத்து அதிலிருந்து வரும் வட்டியில் அபிவிருத்தி வேலைகளை முன்னெடுப்பது சிறந்தெதென்று திரு. ஜெகன் கருத்துத் தெரிவித்தார்.
இதில் இருக்கின்ற நடைமுறைச்சிக்கல்கள் தொடர்பாக தேவன் அவர்களால் முவைக்கப்பட்ட கேள்விக்கு விடை தேடும் வகையில் உசன் இராமநாதன் மகா வித்தியாலய முன்னாள் அதிபர் சிவசரவணபவன் (சிற்பி) அவர்களின் மகன் சுந்தேரேஸ்வரன் அவர்களிடம் ஆலோசனை பெறுவதென்றும் அதனை திரு. ஜதுசன் முன்னெடுப்பதென்றும் முடிவுசெய்யப்பட்டது. திரு. சுந்தரேசன் வங்கித் துறையில் உயர் பதவி வகிப்பவர் என்பதோடு உசன் மண்மேல் அக்கறை உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நேரத்தில் சேர்க்கப்படும் நிதியை முதலீடு செய்து தொழில் ஒன்றை ஆரம்பித்து அதிலிருந்து வரும் இலாபத்தை உசன் அபிவிருத்திக்குப் பாவிக்கலாம் என்ற கருத்தை திரு. ஜெயதேவன் முன்வைத்தார். இதற்கு நீண்ட காலம் எடுக்கும் என்பதால் இது குறித்து உரிய நேரத்தில் கலந்துரையாடலாம் என்று முடிவுசெய்யப்பட்டது.
சேகரிக்கும் பணத்தைத் தற்காலிகமாக உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் தனியான வங்கிக் கணக்கொன்றில் வைப்பிலிடலாம் என்ற கருத்தை திரு. தயாபரன் முன்வைத்தார். அதைச் சபையும் ஏற்றுக்கொண்டது. கனடாவில் வைப்பிலிடுவதால் வட்டிப் பணம் கிடைக்காது என்ற யதார்த்தமும் கருத்திலெடுக்கப்பட்டது.
அடுத்து ஒவ்வொரு நாட்டுக்கான பிரதிநிதிகள் தெரிவில் ஏற்கனவே பதிவாகிய நாடுகளைத் தாண்டி மிகுதியான நாடுகளின் பிரதிநிதிகளின் பெயர்கள் சபையால் முன்மொழியப்பட்டது. இவர்களுடன் தொடர்புகொண்டு அவர்களை உள்வாங்கும் பொறுப்பு திரு,தயாபரன் மற்றும் திரு. ஜெயதேவன் ஆகியோரிடம் கொடுக்கப்பட்டது.
தொடர்ந்து இப்பொதுக்கட்டமைப்பின் உத்தியோகபூர்வமான பேச்சாளராக திரு. ஜெயதேவன் அவர்களைச் சபை ஏகமனதாகச் தெரிவுசெய்தது. பொதுக்கட்டமைப்பின் செயல்பாடுகள் தொடர்பான செய்திகளை நிர்வாகத்தின் ஒப்புதலோடு பொதுத்தளங்களில் வெளிக்கொண்டுவருவதுடன் விளக்கங்கள் கொடுப்பதும் பேச்சாளரின் கடமையாக இருக்கும்.
அடுத்து இப்பொதுக்கட்டமைப்பின் கன்னிமுயற்சியாகச் செய்யக்கூடிய வேலைத் திட்டம் பற்றிக் கலந்துரையாடப்பட்டது. ஏற்கனவே எண்ணக்கருவிலிருந்த உசன் கட்டுவரம்பு பாதையைச் செப்பனிட்டு அழகுபடுத்தும் வேலைத்திட்டத்தினை மேற்கொள்வது சாத்தியமா என்று ஆராய்வது என்று தீர்மானிக்கப்பட்டது. அதை எப்படியான வழிமுறையில் செய்துகொள்ளலாம் என்ற கருத்தை திரு. ஜெகன் அவர்கள் அளித்தார். இது குறித்த அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு திரு. ஜதுசன் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
தொடர்ந்து சபையோர் கருத்துக்கு நேரம் ஒதுக்கப்பட்டது. இந்த நேரம் கருத்து கூறுகையில் திரு. சிவானந்தம் அண்ணா அவர்கள் கட்டுவரம்பைச் சீர்செய்கின்றபொது அங்குவைக்கின்ற மரங்களுக்கான நீர் வழங்கல் தேவைகளையும் கவனத்தில் கொள்ளும்படி கேட்டுக்கொண்டதோடு அவரது உள்ளக்கிடங்கில் இருந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தி மனதாரப்பாராட்டியதோடு வாழ்துரைத்தார். திரு. ஜெபநாமகணேசனும் இந்தப் பொதுக் கட்டமைப்பு தனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறதென்றும், இதன் வெற்றிக்கு அனைவரும் பாடுபட வேண்டுமென்றும் கூறி வாழ்த்தினார்.
இறுதியாக ஆர்வத்தோடு கலந்துகொண்டு பங்களிப்பாற்றிய அனைவருக்கும் திரு. பாஸ்கரன் நன்றி கூறினார்.
இந்தப் பொதுக்கட்டமைப்பின் செயற்பாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டோர், 40 வயது முதல் 60 வயது வரையானோர் மற்றும் 40 வயதுக்குக் கீழ்ப்பட்டோர் என்ற மூன்று வயதுப் பிரிவினர் உள்வாங்கப்படுவதால் அவர்களின் வளங்களையும், ஆலோசனைகளையும், செயல்திறனையும் ஒன்று சேர்ப்பதனால் இதன் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
உசன் மண்ணின் வளர்ச்சிக்கு, உலகளாவிய உசன் கட்டமைப்பின் (Usan Global Forum) ஊடாக மனங்களாலும், வளங்களாலும் ஒருமித்து வெற்றி காண்போம்!