ஒரு கிராமத்தின் வளர்ச்சியில் பாடசாலை எவ்வளவு முக்கிய பங்கு வகிக்கிறதோ அதற்கு இணையான பங்கை முன்பள்ளியும் வகிக்கிறது. ஆரம்பக் கல்வியை செவ்வனே ஊட்டி இளையவர்களைப் பாடசாலைக் கல்விக்குத் தயார் செய்யும் ஒரு பாரிய பொறுப்பை முன்பள்ளி வகிக்கின்றது. இப்படியான ஒரு முன்பள்ளிக்கு எமது தாய்க்கிராமமாம் உசனிலே இதுவரை ஒரு நிரந்தரக் கட்டிடம் இல்லாதிருப்பது பெருங்குறையே.
இந்தக் குறையை நிவர்த்தி செய்வதற்கான அரிய சந்தர்ப்பமொன்று வந்துள்ளது. உசன் இராமநாதன் முன்பள்ளி நிர்வாகத்தின் அயராத முயற்சியால் World Vision Lakna எனும் அரச சார்பற்ற தொண்டு நிறுவனம் ஒரு நிரந்தரக் கட்டிடத்தைக் கட்டித்தர முன்வந்துள்ளது. இதற்காக 37 இலட்சம் ரூபாவுக்கு வழங்கப்பட்ட
மதிப்பீடு நிபந்தனையோடு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிரந்தரக் கட்டிடத்தைக் கட்டுவதற்கு World Vision Lakna 27 இலட்சம் ரூபாவை வழங்க முன்வந்துள்ளது. மிகுதி 10 இலட்சம் ரூபாவை உசன் இராமநாதன் முன்பள்ளி வழங்கவேண்டும் என்பதே நிபந்தனை. இந்த நிலையில் உசன் இராமநாதன் முன்பள்ளி நிர்வாகம் உசன் மக்களிடமும் மற்றும் கொடையாளிகளிடமும் நிதி உதவி கேட்டு விண்ணப்பித்துள்ளது.
இந்த முயற்சியை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்காக உசன் இராமநாதன் முன்பள்ளி அபிவிருத்திக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக உசன் கந்தசாமி கோவில் தர்மகர்த்தா கு. விமலதாஸ் அவர்களும், செயலாளராக கோபிகா மதீசன் அவர்களும், பொருளாளராக சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் கா. சி. செல்வரூபன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் கட்டிடத்துக்கான காணியை வழங்குவதற்கு திரு விமலதாஸ் அவர்கள் முன்வந்துள்ளார்.
கட்டிட நிதிக்காக உசன் மக்கள் சார்பில் 10 இலட்சம் ரூபா வைப்பிலிடவேண்டும். இதைவிட தளபாடங்கள் உட்பட மேலதிக செலவுகளும் ஏற்படும் என்பதையும் கருத்திற்கொண்டு முடிந்தவரை நிதி உதவியைச் செய்யவேண்டுமென உசன் மக்களை உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா வேண்டிநிற்கின்றது.
இந்த நிதியை Feb. 15 திகதிக்கு முன்பாக வங்கிக்கணக்கில் வைப்பிலிடவேண்டும். ஏற்கனவே பொருளாளர் செல்வரூபன் அவர்களின் வேண்டுகோளையேற்று பலர் நிதிப் பங்களிப்புச் செய்வதாக உறுதியளித்துள்ளனர். ஏனையோரும் விரைவாக முன்வந்து நிதி உதவி செய்து இந்த நற்காரியம் வெற்றிகரமாக நிறைவேற உதவ வேண்டும்.
கனடாவிலிருந்து நிதி வழங்க விரும்புவோர் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவினூடாக இந்த நிதி வழங்கலைச் செய்ய ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. உங்கள் பங்களிப்பை உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம்
- கனடாவின் பொருளாளர் சரவணமுத்து பத்மகாந்தன் அவர்களுக்கு pathman.s1@hotmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு e-transfer செய்யுமாறு வேண்டுகிறோம். உங்கள் பங்களிப்புக்குப் பற்றுச் சீட்டு வழங்குவதற்காக உங்கள் முழுமையான தபால் முகவரியையோ அல்லது மின்னஞ்சல் முகவரியையோ பத்மகாந்தனுக்கு வழங்குமாறும் வேண்டுகிறோம்.
உங்கள் நிதி உதவியை Feb.10 ஆம் திகதிக்கு முன் வழங்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
மற்றைய நாடுகளிலிருப்போர் உங்கள் நிதிப் பங்களிப்பை நேரடியாக உசன் இராமநாதன் முன்பள்ளி அபிவிருத்தி குழுவிடம் கையளிக்க முடியும். உங்கள் நிதியை இலங்கை வங்கி கொடிகாமம் கிளையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள கணக்கிலக்கம் 87030672 இல் வைப்புச் செய்யவும். இந்த வாங்கிக் கணக்கு திரு கு. விமலதாஸ், திருமதி ம. கோபிகா மற்றும் திரு கா. சி. செல்வரூபன் ஆகியோரைக்கொண்ட இணைப்புக் கணக்காகும்.
மனம் நிறைந்த உங்கள் பங்களிப்பை விரைந்து வழங்குவீர்.
கொடையாளிகள் அனைவருக்கும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா உசன் இராமநாதன் முன்பள்ளி நிர்வாகம் சார்பில் முன்கூட்டியே தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.