அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Sunday, January 17, 2021

நன்றி! நன்றி!! நன்றி!!!


"உசன் உறவுகள் - சர்வதேச இணைய விழா" சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் நடைபெற்று முடிந்திருப்பதை உங்களிடமிருந்து வரும் வாழ்த்துகளும், பாராட்டுகளும், நன்றிகளும் பறைசாற்றி நிற்கின்றன. இப்படியான ஒரு நிகழ்வை வழங்க முடிந்ததையிட்டு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பெருமை கொள்கிறது.
Toronto நேரம் காலை 7 மணிக்கு இணைப்பை ஏற்படுத்த முடியும் என்று அறிவித்திருந்தபோதும், காலை 6:30 மணிக்கு இணைப்பை ஆரம்பித்தபோதே மக்கள் காத்திருந்தது நிகழ்வின் வெற்றியைக் கட்டியம் கூறியது. அந்த நேரத்தில் இணைந்தவர்கள் கலை நிகழ்வுகள் முடியும்வரை தொடர்ந்திருந்தது நிகழ்ச்சியின் தரத்தை எடுத்துக்கூறியது.
கிட்டத்தட்ட 158 இணைப்புகள் ஒரே நேரத்தில் ஏற்படுத்தப்பட்டிருந்தன. ஒரு இணைப்பில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் குடும்பமாக நிகழ்ச்சிகளை பார்த்தும், கேட்டும் மகிழ்ந்தனர். New Zealand, Australia, Switzerland, France, Germany, Italy, Sweden, Denmark, Norway, UK, Sri Lanka, USA, Canada என்று 13 இற்கு மேற்பட்ட நாடுகளிலிருந்து நேர வித்தியாசத்தையும் கடந்து பார்வையாளர்கள் கலந்துகொண்டது நிகழ்ச்சிக்குச் சிறப்பே.
கலை நிகழ்ச்சிகள் அத்தனையும் மிகவும் சிறப்பாக இருந்தன. கிட்டத்தட்ட மூன்றரை மணித்தியாலங்கள் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து உறவுகளோடு உரையாடல் ஆரம்பித்து மேலும் இரு மணித்தியாலங்கள் நீடித்தது. ஒருவரை ஒருவர் தேடித் தேடிக் கதைத்தார்கள். உள்ளத்தில் உறங்கிக்கொண்டிருந்த உணர்வுகள் அப்போது கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தன. பலர் உணர்ச்சிவசப்பட்டுக் காணப்பட்டனர். கண்கள் பனிக்க, இதயம் படபடக்க பிரிய மனமின்றிப் பலர் பிரிந்து சென்றனர்.
கலை நிகழ்ச்சிகளை வழங்கிய கலைஞர்களுக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தவண்ணமுள்ளனர். உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவும் இந்தக் கலைஞர்களுக்குத் தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.
நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஜோதி ஜெயகுமாருக்குப் பாராட்டுகள் வந்து குவிந்தவண்ணமுள்ளன. நிகழ்ச்சிகளைச் சிறப்பாகவும், சில சமயங்களில் உணர்ச்சிவசப்பட்டும் அவர் தொகுத்தளித்தது நிகழ்ச்சியின் வெற்றிக்கு இன்னுமொரு காரணம்.
"அந்தத் தம்பிக்கும் எங்கள் நன்றியையும், வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துவிடுங்கள்" என்று பலர் வேண்டுகோள் விடுத்திருந்தனர். நிகழ்வுகள் தொய்வின்றி தொடர தொழில்நுட்பத்தில் கடுமையாக உழைத்த கீரனையே அவர்கள் "தம்பி" என்று உரிமையோடு அழைத்தனர்.
ஜோதிக்கும், கீரனுக்கும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தலை சாய்த்து நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.
மொத்தத்தில் "உசன் உறவுகள் - சர்வதேச இணைய விழா" வெற்றிகரமாக நடைபெற உதவிய அத்தனைபேருக்கும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது நன்றியத் தெரிவித்து நிற்கிறது.