உசன் வயற்கரையைச் சேர்ந்த தாமோதரம்பிள்ளை தயாபரன் அவர்கள் இறைபதம் அடைந்தார்.
உசன் மண்ணில் பிறந்து, எந்தச் சூழ்நிலையிலும் அந்த மண்ணைவிட்டுப் பிரிந்து செல்லாத ஒருவராக இவர் வாழ்ந்துள்ளார். உசன் மண்ணில் அவர் கால்தடம் பதியாத பகுதிகளே இல்லை என்றால் அது மிகையாகாது. உசன் மண்ணின் நலத்தில் அதீத அக்கறை இவருக்கு இயற்கையாகவே அமைந்திருந்தது. உசன் கந்தசாமி கோவில் திருவிழாக்கள், அன்னதான நிகழ்வுகளில் இவரின் பங்களிப்பு அளப்பரியது. இதைவிட உசன் இராமநாதன் மகாவித்தியாலயம், வாசிகசாலை ஆகியவற்றின் வளர்ச்சியிலும் இவர் முக்கிய கவனம் செலுத்தினார்.
இவர் ஒரு சிறந்த சாரதியாகவும் விளங்கினார். உசன் கிராமத்திலும், வயல்வெளியிலும் இவரது உழவு இயந்திரம் செல்லாத இடமே இல்லையெனலாம். விழிப்புக்குழுவுக்கு இரவு நேர சாரதியாகவிருந்து இவர் ஆற்றிய கடமை யாவரும் அறிந்ததே.
ஈழ விடுதலைக்காக இவர் ஆற்றிய பணி நன்றியோடு நினைவுகூரப்படவேண்டியது.
அன்னாரின் ஆன்மா சாந்தியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா உசன் முருகனைப் பிரார்திக்கிறது. அன்னாரின் இழப்பால் துவண்டுபோயிருக்கும் குடும்பத்தினருக்கு அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறது.