அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Sunday, May 21, 2017

கனடா வாழ் உசன் மக்களினதும், உசன் இராமநாதன் மகாவித்தியாலய பழைய மாணவர்களினதும் கோடை கால ஒன்றுகூடல் - 2017'


உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் ஏற்பாட்டில் நடைபெறும் கனடா வாழ் உசன் மக்களினதும், உசன் இராமநாதன் மகா வித்தியாலய பழைய மாணவர்களினதும்  கோடைகால ஒன்றுகூடல் ஜூலை மாதம் 1 ம் திகதி, சனிக்கிழமை இடம்பெற உள்ளது.  வழமையாக ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெறும் இந்த நிகழ்வு இந்த வருடம் சனிக்கிழமையில் நடைபெற நேரம் கூடியுள்ளது.  இதுவரை கலந்துகொள்ள முடியாதவர்கள் இந்த வருட நிகழ்வில் கலந்துகொள்ள இது ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமைந்துள்ளது.

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் வருடாந்தப் பொதுச் சபைக் கூட்டமும் இந்த ஒன்றுகூடலின் ஆரம்பத்தில் நடைபெறும்.  இந்த பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை வழங்கி ஒன்றியத்தின் வளர்ச்சிக்கு உதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கனடாவின் 150 ஆவது பிறந்ததினத்தில், நடைபெறப்போகும் இந்த ஒன்றுகூடலானது, Scarborough நகரில் Neilson Road மற்றும் Finch Avenue சந்திக்கு அருகாமையில் அமைந்திருக்கும் Neilson Park இல் இடம்பெறும்.
நாள் முழுவதும் சுண்டல் கடலை, கொத்து ரொட்டி, குழைசாதம், BBQ உட்பட்ட பல வகையான உணவுப் பதார்த்தங்கள் பரிமாறப்பட உள்ள இந்த நிகழ்வில் அனைத்து வயதினருக்குமான விளையாட்டுப் போட்டியும் இடம்பெறும். விசேட நிகழ்வாக கயிறிழுத்தல் போட்டி இடம்பெற உள்ளது.

இந்த வருடாந்த நிகழ்வு குறித்து உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத் தலைவர் திரு. சுப்பிரமணியம் பாஸ்கரன் அவர்களிடம் கருத்துக் கேட்டபோது, "நான் நிர்வாகசபையில் நீண்டகால உறுப்பினராக இருந்தாலும் தலைவர் பொறுப்பில் இருந்து நடத்தும் முதல் கோடை கால ஒன்றுகூடல் இது என்பதால் மக்கள் மத்தியில் இருக்கும் எதிர்பார்ப்புக்கு ஏற்றால் போல் நிகழ்வு அசத்தலாக இருக்கும்" என நம்பிக்கை வெளியிட்டார்.  கடந்த குளிர்கால ஒன்றுகூடலில் இருந்தது போல சிறப்பு அம்சங்கள் இடம்பெறும் எனவும், அதிகளவு உசன் மக்களை  வரவழைக்கும்  பணியில் நிர்வாகசபை உறுப்பினர்கள் அக்கறையுடன் ஈடுபட்டிருப்பதால், அதிகளவு மக்கள் இம்முறை வருவார்கள்  என்றும் நம்பிக்கை தெரிவித்தார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், "ஒரு அமைப்பின் வளர்ச்சி அதன் உறுப்பினர்களின் கருத்துப் பரிமாற்றத்திலேயே தங்கியுள்ளது. எனவே பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு மக்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும்" என்றும் கேட்டுக்கொண்டார்.

உழைத்துக் களைத்த உள்ளங்களுக்கு உற்சாகம் தரும் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு கனடா வாழ் உசன் மக்கள், மற்றும் உசன் இராமநாதன் மகாவித்தியாலய பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், அயற்கிராம மக்கள் அனைவரையும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா அன்போடு அழைக்கிறது.