உசன் கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவரும், யாழ். உசன் இராமநாதன் மகா வித்தியாலய பழைய மாணவனும், பிரபல உயிரியல் ஆசிரியரும், கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலை விரிவுரையாளருமான சின்னத்தம்பி குணசீலன் அவர்களுக்கு, அவரின் மேலான கல்விச் சேவையைப் பாராட்டி கனடா வாழ் உசன் மக்கள் சார்பில் மதிப்பளிப்பும், உசன் மக்களுடனான சந்திப்பும் கனடாவில் நடைபெற்றது. உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் தலைவர் சுப்பிரமணியம் பாஸ்கரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தனது இளமைக்கால உசன் வாழ்க்கை அனுபவங்கள், உசன் பாடசாலை அனுபவங்கள் மற்றும் தனது சொந்த வாழ்க்கை அனுபவங்களை அவர் உசன் மக்களுடன் பரிமாறினார்.
நீண்ட கால இடைவெளிகளைத் தாண்டி தனது பழையகால உசன் உறவுகளைச் சந்தித்தது தனது தாயை மீண்டும் சந்தித்த உணர்வைத் தருவதாகவும், உசன் மக்களால் வழங்கப்படட இந்த கெளரவம் தனது தாயிடம் இருந்து கிடைத்த அங்கீகாரம் போல தான் உணர்வதாகத் தெரிவித்து தனது உணர்வுகளை உசன் மக்களுடன் பகிர்ந்து கொண்ட நிகழ்வு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. திரு. குணசீலன் ஆசிரியர் தனது உறவினர்கள், நன்றிக்குரிய மூத்தவர்களிடம் இருந்து ஆசிபெற்றுக்கொண்டதுடன் அவர்களுக்குத் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
உசன் மக்களையும், தனது வகுப்புத் தோழர்களையும் கண்ட மகிழ்ச்சி அளவில்லாதது எனத் தெரிவித்து தற்போதைய ஈழத்து இளைய கல்விச் சமுதாயத்துக்கு என்ன தேவை என்பதை மிகவும் ஆழமாக, அனுபவத் திறனோடு விளங்கப்படுத்தினார்.
அவரைச் சந்திக்க ஆவலோடு வந்திருந்த உசன் மக்களும் தமது இளமைக் கால நினைவுகளை அவரோடு பகிர்ந்துகொண்டனர். ஆசிரியருடனான இந்த சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தது என்று அனைவரும் கருத்துத் தெரிவித்தனர்.
eKuruvi நிறுவனத்தினரின் வருடாந்த மதிப்பளிப்பு நிகழ்வில் அவருக்கு வழங்கப்பட்ட "சமுதாயச் சிற்பி" என்ற விருதைப் பெற்றுக் கொள்வதற்காக அவர் கனடா வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
.