அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Sunday, April 12, 2015

உசன் சந்தியில் பொதுமக்கள் நிழல் குடை திறப்பு


கண்டி வீதி - உசன் சந்தியில் கொளுத்தும் வெயிலிலும், கொட்டும் மழையிலும் பயணிகள் பேருந்துக்காகக் காத்திருந்த நிலைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாகப் பயணிகள் நிழல் குடை இல்லாதிருந்த குறையை நிவர்த்தி செய்ய உசன் சிறி முருகன் விளையாட்டுக் கழகம் முன்வந்தது. அவர்களது செயற்திட்டத்துக்கு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா ஊடாக அனுசரணை வழங்க முன்நாள் இ.போ .ச நடத்துனர், அமரர் வெற்றிவேலு அவர்களின் குடும்பத்தினர் உறுதி அளித்தனர்.
உசன் சிறி முருகன் விளையாட்டுக் கழக உறுப்பினர்களின் முயற்சியில் கட்டப்பட்ட பேருந்து தரிப்பிட நிழல் குடை இன்றைய தினம் ஏப்ரல் 12 ம் திகதி, மக்கள் பாவனைக்காகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கழகத்தின் தலைவர் திரு. ரூபன் தலைமையில் நடைபெற்ற திறப்புவிழாவை திரு.செல்லத்துரை ஜதிகேசன் தொகுத்து வழங்கினார்.
தரிப்பிடத்தை அமைக்க ஆலோசனை வழங்கியதோடு ஆரம்பக் கட்ட நடவைக்ககளை முன்னெடுத்த சமூக சேவையாளர் திரு. மு. க. சிவானந்தம் மற்றும் உசன் பண்டிதர் சரவணமுத்து பொது நூலக நிர்வாகக் சபைத் தலைவர் திருமதி மீரா தேவரஞ்சன் ஆகியோர் மங்கள விளக்கை ஏற்றினர்.
வடமாகாண சபை உறுப்பினர், சட்டத்தரணி திரு.கேசவன் சயந்தன் அவர்களும், அமரர் வெற்றிவேலு அவர்களின் மாமனார் திரு. கனகசிங்கம் அவர்களும் நிழல் குடையைத் திறந்து வைத்தனர்.
அமரர் வெற்றிவேலு அவர்களின் உருவப்படத்துக்கு கழகத்தின் செயலாளர் திரு. அ. பிரபாகரன் மலர்மாலை அணிவித்து மதிப்பளித்தார்.
உசன் மக்கள் மத்தியில் உரை நிகழ்த்திய வடமாகாண சபை உறுப்பினர் திரு. கேசவன் சயந்தன் அவர்கள் போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் எல்லா அபிவிருத்திக்கும் அரசாங்கத்தை எதிர்பார்க்காமல் தமது கிராமத்தை தாமே அபிவிருத்தி செய்வது வரவேற்கதக்கது எனவும் அதனை உசன் கிராம மக்களும், அமைப்புகளும் சிறப்புடன் செய்து வருவது அனைவருக்கும் முன்னுதாரணமாக இருப்பதாகவும், இதனை அனைத்து கிராம மக்களும் முன்மாதிரியாக எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.

தொடர்ந்து நிழல் குடையைச் சிறப்பாக கட்டிமுடித்த நிறுவன அதிபர் திரு. ப. சுகந்தன் அவர்களுக்கு கழகத்தின் தலைவர் நன்றி தெரிவித்து மதிப்பளித்தார். உசன் சிறி முருகன் விளையாட்டுக் கழகக் காப்பாளர், வைத்தியர் திரு ஐ. ஜெபணாமகணேசன் அவர்கள் இந்த பொதுப்பணி சிறப்பாக நடைபெற உதவிய அனைவருக்கும் நன்றி கூறினார்.