அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Friday, April 10, 2015

உசன் சந்தியில் பயணிகள் நிழல் குடை திறப்பு விழா

கண்டி வீதி - உசன் சந்தியில் கொளுத்தும் வெயிலிலும், கொட்டும் மழையிலும் பயணிகள் பேருந்துக்காகக் காத்திருந்த நிலைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாகப் பயணிகள் நிழல் குடை இல்லாதிருந்த குறையை நிவர்த்தி செய்ய உசன் சிறி முருகன் விளையாட்டுக் கழகம் முன்வந்தது. அவர்களது செயற்திட்டத்துக்கு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா ஊடாக அனுசரணை வழங்க முன்நாள் நடத்துனர், அமரர் வெற்றிவேலு அவர்களின் குடும்பத்தினர் உறுதி அளித்தனர்.

நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ள இந்த நிழல் குடை பயணிகளுக்கு மிகவும் ஆறுதல் அளிக்கும் என்பதில் ஐயமில்லை. தற்போதைய அரசியல் நிலையில் பல சிரமங்களுக்கு மத்தியில் உரியவர்களிடமிருந்து அனுமதி பெற்று அமைக்கப்படுள்ள இந்தப் பயணிகள் நிழல் குடை 12.04.2015 ஞாயிற்றுகிழமை காலை 9:30 மணிக்கு பயணிகள் பயன்பாட்டுக்குத் திறந்து விடப்பட உள்ளது. இந்தத் திறப்பு விழாவுக்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு மக்கள் அனைவரையும் உசன் சிறி முருகன் விளையாட்டுக் கழகம் அழைத்துள்ளது. இந்த முன்மாதிரியான நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா வேண்டுகோள் விடுக்கின்றது.

இந்தப் பயணிகள் நிழல் குடைத் திட்டம் நிறைவுபெற அனுசரணை வழங்கிய அமரர் வெற்றிவேலு குடும்பத்தினருக்கும், திட்டத்தைச் செயற்படுத்தி முடித்துள்ள உசன் சிறி முருகன் விளையாட்டுக் கழகத்துக்கும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா நன்றியைத் தெரிவிக்கிறது.