நீண்ட காலமாக கண்டி வீதி உசன் சந்தியில் பேருந்து தரிப்பிடம் இல்லாத நிலையில் கொட்டும் மழையிலும், வெய்யிலிலும் மக்கள் படும் அசௌகரியங்களைக் கண்டு, உசன் ஸ்ரீ முருகன் விளையாட்டுகழகம் உசன் சந்தியில் பேருந்து தரிப்பிடம் அமைக்கும் திட்டம் ஒன்றை முன்னெடுத்தது. இந்தச் செயற்திட்டத்தை உசன் ஸ்ரீ முருகன் விளையாட்டுக் கழக ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவரும் முன்னாள் இ.போ.ச. நடாத்துனருமான அமரர் திரு.க.வெற்றிவேலு அவர்களின் நினைவாக நிறைவேற்ற அன்னாரின் குடும்பத்தினர் முன்வந்து உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவை அணுகி இந்த செயற்திட்டத்தை நிறைவேற்றித் தருமாறு கேட்டுக்கொண்டனர். அதற்கிணங்க உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா, உசன் ஸ்ரீ முருகன் விளையாட்டுக் கழகத்தினரோடு தொடர்புகொண்டு தமது ஒத்துழைப்பைத் தெரிவித்தனர்.
இந்தப் பேருந்து தரிப்பிடத்தை அமைப்பதற்கான சட்டரீதியான அனுமதி உரிய திணைக்களங்களில் இருந்து கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து அதற்கான ஆரம்ப கட்டுமாணப் பணி 15/12/20104 அன்று உசன் ஸ்ரீ முருகன் விளையாட்டுக்கழகத் தலைவர் திரு. ரூபன் தலைமையில் சுப நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டது. சமய ரீதியான சடங்கைத் தொடர்ந்து அமரின் சகோதரான திரு.க. கனகரத்தினம் அவர்கள் அடிக்கல்லை நாட்டிவைத்தார். தொடர்ந்து கழகத் தலைவர் திரு. ரூபன் மற்றும் உறுப்பினர் திரு. பகீரதன் ஆகியோரும் அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.
இந்த நல்ல செயற்திட்டத்தை நிறைவேற்ற முன் வந்த அமரர் திரு. க. வெற்றிவேலு குடும்பத்தினருக்கு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது நன்றிகளைத் தெரிவித்து நிற்கிறது. இந்தச் செயற்திட்டத்தை முன்னெடுக்கும் உசன் ஸ்ரீ முருகன் விளையாட்டுக் கழகத்துக்கு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது பாராட்டுக்களைத் தெரிவிக்கிறது.