அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Thursday, February 27, 2014

திரு. சிவசுப்பிரமணியம் பாலகுமாரன்

உசன் கந்தசாமி கோவில் முன்னாள் தர்மகர்த்தா திரு. திருஞானசோதி அவர்களின் மைத்துனர், சிவசுப்பிரமணியம் பாலகுமாரன் (Lawyer)அவர்கள் 23-02-2014, ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

இவர் யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்டவர்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம் யோகம்மா(நல்லூர் மழவராயர் மாப்பாண முதலியார்) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சண்முகதாஸ்(நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்னாள் தர்மகர்த்தா, மாப்பாண முதலியார்), மனோன்மணி(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மீனலோஜினி(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,

பாலினி, சகிலா, மனூஜா ஆகியோரின் அருமைத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான கனகசபாபதி, ஜெயலக்‌ஷ்மி, விக்னராஜா, மற்றும் வரலட்சுமி(கனடா), யோகலட்சுமி(கனடா), விஜயலட்சுமி(கனடா), இந்திரலட்சுமி(கனடா), சிவகுமாரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஞானகுமாரன்(Accountant), கிரிதரன்(Vimika Banquets), தினேஷ்வர்(MBA, CGA) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான கனகரெட்ணம், கருணநாதன், திருஞானசோதி, மற்றும் இராசம்மா(கனடா), தாக்‌ஷினி(கனடா), சுந்தரலிங்கம்(கனடா), சிவநாதன்(கனடா), வாசுகி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தனஞ்ஜெயன், லவன், சுஸ்மித்தா, சமீத்தா, அம்ரித்தா ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் புதன்கிழமை 26/02/2014, பி.ப 4 மணி முதல் மாலை 9:30 மணி வரை Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue Markham, ON L3R 5G1, Canada இல் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டு, வியாழக்கிழமை 27/02/2014, மு.ப. 8 மணி முதல் மு.ப. 11 மணி வரை அதே மண்டபத்தில் கிரியைகள் நிகழ்த்தப்பட்டுப் பின்னர் Elgin Mills Cemetery,1591 Elgin Mills E, Richmond Hill, ON L4S 1M9, Canada இல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
வீடு - கனடா+14165510490
குமார் — கனடா+14166187294
கிரி — கனடா+14164283333
டினேஸ் — கனடா+16479635539


Sunday, February 23, 2014

உசன் பாலேந்திரன் காண்டீபன் பெற்ற அதி உயர் விருது

உசன் மண்ணுக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில், உசனைச் சேர்ந்த திரு. திருமதி பாலேந்திரன் புஸ்பா தம்பதிகளின் புதல்வனும், உசன் இராமநாதன் மகா வித்தியாலய பழைய மாணவனுமாகிய திரு. பாலேந்திரன் காண்டீபன் அவர்கள் அவுஸ்திரேலிய அரசினால் வழங்கப்படும் இலங்கையின் சிறந்த நிர்வாக முகாமைத்துவத்துக்குரிய அதி உயர் விருதான "Australian Government Award for Excellence in Business Administration 2014" என்ற விருதைப் பெற்றுள்ளார்.


  

இலங்கையின் முன்னணி நிறுவனமாக விளங்கிவரும் மகாராஜா நிறுவனத்தின் ஊடகப்பிரிவின் (வானொலி/தொலைக்காட்சி) தமிழ், சிங்கள சேவைகளின் நிர்வாகப் பணிப்பாளராகச் செயலாற்றிவரும் காண்டீபன், அந்நிறுவனத்தின் ஊடக வளர்ச்சியில் பல திறமையான செயல் வடிவங்களைப் பெற்று கொடுத்து முன்னணி நிறுவனமாகத் தக்கவத்துள்ளார். அத்துடன் இலங்கையில் புகழ்பெற்ற தொலைக் காட்சி நிகழ்ச்சியான சக்தி TV யின் "மகா லட்சாதிபதி" நிகழ்ச்சியைத் தொகுத்துவளங்கி வருகிறார்.



திரு. பாலேந்திரன் காண்டீபன் பன்முகத் திறமை கொண்ட கலைஞன். தமிழ் நாட்டின் குமுதம் நிறுவனத்தின் "ஆஹா FM " வானொலியில் பணியாற்றித் தமிழக மக்களின் மனதில் நிறைந்த ஒரு ஒலிபரப்பாளன். அத்துடன் கொழும்பு தமிழ் அமைப்புகளில் நடைபெறும் மேடைப் பேச்சுக்கள், விவாத அரங்குகள், கலை நிகழ்வுகளில் இவரின் குரல் ஒலித்துவருகிறது.



உசனைச் சேர்ந்த பாலேந்திரன் காண்டீபன் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா உசனில் மேற்கொள்ளும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு, அனுசரணையும் ஆலோசனையும் வழங்கி வருபவர். அது மட்டுமன்றி அண்மையில் உருவாக்கம் பெற்ற பண்டிதர் சரவணமுத்து பொது நூலகத்துக்கு ஆரம்பக்கட்ட புத்தகக் கொள்வனவைப் பொறுப்பெடுத்துச் செயல்படுத்தியவர்.

காண்டீபன் பெற்ற இந்த விருது கண்டு உசன் மக்களாகிய நாம் பெருமை கொள்வதுடன், உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா சார்பாக எமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


Saturday, February 22, 2014

திரவிய அபிஷேக ஸ்கந்த ஹோம மகாயக்ஞம்

இந்து சமுத்திரம் ஈன்றெடுத்த முத்தென மிளிரும் ஈழ வளநாட்டின் வடபுலத்தில், யாழ் தென்மராட்சிப் பெரும் பகுதியில் மருத்துவ குணமிகு மரம் சூழ் சோலையும், வேம்பும், அரசும் இணைந்து சிவசக்தி ஐக்கியத்தை உணர்த்தி நிற்கும் பாங்கும், பசுமையும், பழமையும், பெருமையும் பொருந்திய உசனில் அமரர் இடர்தீர அமரம் புரிந்த குமரன் வேல்ரூபம் தாங்கி அருளாட்சி புரியும் உசன் கந்தசாமி கோவிலில் நடைபெறும் திரவிய அபிஷேக ஸ்கந்த ஹோம மகாயக்ஞம்.

நிகழும் மங்களமிகு ஸ்ரீ விஜய வருஷம் மாசித் திங்கள் 18 ஆம் நாள் (02.03.2014) ஞாயிற்றுக் கிழமை காலை 8 மணி முதல் உசன் கந்தசாமி கோவில் பிரதம குரு, ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர் கோவில் "அருள் வாக்குச் சித்தர்" குகஸ்ரீ இரத்தின கேதீஸ்வர சுவாமிகள் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெறும்.

40 விஷேட திரவியங்களினால் மஹாபாஞ்ஜ ஜன்ய சகித 108 வலம்புரி சங்காபிஷேகமும், ஸ்கந்த ஹோமமும் நடைபெற இறையருள் கைகூடியிருப்பதால் அடியார்கள் இவ்மஹா வேள்விகளில் பங்குபற்றி உலக நன்மைக்கும், உயிர்களின் ஷேமத்திற்கும் பிரார்த்திப்பதோடு, ஒவ்வொருவரும் தர்ப்பை அணிந்து, சங்கற்பித்து குடும்பம் வீதியுலா வரும் வேளை அனைவரும் நெய்த் தீபம் ஏந்தி வீதிவலம் வந்து முருகப் பெருமானின் அபிஷேகத்தில் பங்குபற்றி தங்கள் குடும்பப் பிரார்த்தனையிலும் ஈடுபடலாம்.

இப் புண்ணிய கைங்கரியத்தில் பங்குபற்றி சங்கற்பித்து உலக நன்மைக்காகப் பிரார்த்தனையில் ஈடுபட விரும்பும் அடியார்கள் பிரதம குருக்கள் மற்றும் தர்மகர்த்டாவுடன் தொடர்புகொண்டு வேண்டிய ஏற்பாடுகளச் செய்துகொள்ளலாம்.

அபிஷேக, ஹோமபூஜை, அன்னதானம் என்பவற்றுக்குரிய பொருட்களை உபகரித்து திருவருட்பேறு பெற்றுய்வீர்களாக.

அன்றைய தினம் இல. 769 வழி இ.போ.ச. மற்றும் தனியார் சிற்றூர்திச் சேவை யாழ்ப்பாணம் - உசன் - யாழ்ப்பாணம் இடம்பெறும். மாற்று வலுவுள்ளோர்களுக்கான உதவியும் ஆலயத்தில் வைத்து வழங்கப்படும்.

இந்தக் கைங்கரியத்திற்கு நிதி உதவி அளிக்க விரும்பும் அடியார்கள் பின்வரும், வங்கிக் கணக்கில் தங்கள் பங்களிப்பை வைப்பிலிடலாம்: Mr. R. Ketheeswara Sarma, Commercial Bank, Jaffna, A.C.No. 8600921092.

பிரதம குரு தொலைபேசி இலக்கம்: +0777 238561.

இந்த நிகழ்வை www.usankanthan.com என்ற இணையத் தளத்தில் 02/03/2014 அன்று காலை 8 மணி முதல் நிகழ்வு நடைபெறும்போது நேரடியாகக் கண்டுகளிக்கலாம்.


Wednesday, February 19, 2014

உசன் இராமநாதன் ம.வி. விளையாட்டுப்போட்டி



உசன் இராமநாதன் ம.வி. வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி 2014 பாடசாலை மைதானத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. வடமாகாணத்திலேயே "இன்னியம்" என்ற சிறப்பு இசைக்குழுவைக் கொண்ட பாடசாலைகளில் ஒன்றாக விளங்கும் உசன் இராமநாதன் ம.வி. மாணவர்களின் பாரம்பரிய வாத்திய இசை முழங்க, வீரர்களின் அணிவகுப்புடன் நிகழ்வு ஆரம்பமாகியது. பாடசாலை அதிபர் திரு. சோதிலிங்கம் அவர்களின் கட்டுப்பாடான நெறிப்படுத்தலிலும், உசன் மக்கள் மற்றும் பழைய மாணவர்களின் ஒத்துழைப்புடனும் மிகச்சிறப்பாக இந்த விளையாட்டுப்போட்டி நடைபெற்றது.

விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றிய மற்றும் வெற்றியீட்டிய அனைத்து வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.











Sunday, February 16, 2014

கூடிக் குதூகலிக்கக் கோடையில் ஒருநாள்!

அன்பார்ந்த உசன் மக்களே!

எமது நாளாந்த வாழ்கைச் செயற்பாடுகளிலிருந்து விடுபட்டு, மனத்தை வேறு கோணத்தில் செலுத்தி, உங்கள் சொந்தங்களோடும், நட்புக்களோடும் களித்திருக்க வருகிறது கோடையில் ஒருநாள். கனடாவின் கோடை காலத்தில் இப்படியான ஒருநாளை கடந்த 13 வருடங்களாக ஏற்பாடு செய்து தருகிறது உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா. இந்த நாளுக்காகக் காத்திருப்போர் பலர், இந்த நாளைச் சிறப்பாக்கக் கை கொடுப்போர் இன்னும் பலர்.

இந்த வருடக் கோடைகால ஒன்றுகூடலை சற்று மாற்றியமைத்து, வித்தியாசமான முறையிலே ஒழுங்கு செய்ய உத்தேசிக்கப்படுள்ளது. நீங்கள் விரும்பும் வகையிலே இந்த மாற்றம் அமையும் என்பதை மட்டும் இப்போது சொல்லிக்கொள்ளலாம். விளையாட்டுப் போட்டியும், பலவகை உணவுப் பரிமாற்றமும் நிச்சயம் உண்டு என்பதையும் மகிழ்ச்சியோடு அறியத் தருகிறோம்.

இந்தச் சிறப்பு நிகவில் கலந்துகொள்ள நாளைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். August 31, 2014 அன்று ஞாயிற்றுக் கிழமை இந்த நிகழ்வு இடம்பெற உள்ளது. மறு நாள் திங்கட்கிழமை விடுமுறை நாளென்பதால் இன்னும் வசதியாக இருக்கும் என்பது எமது நம்பிக்கை. Scarborough, கனடாவில் அமைந்திருக்கும் Neilson Park இல் இந்த வருடாந்த நிகழ்வு இடம்பெறும்.

உசன் மக்களையும், அயல் கிராமத்து மக்களையும், உசன் இராமநாதன் மகா வித்தியாலய பழைய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களையும் அன்போடு அழைக்கிறது உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா.

இந்த நிகழ்வுக்கு அனுசரணை வழங்க விரும்பும் நிறுவனங்களையும், தனி நபர்களையும் secretary@usan.ca என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வெளிநாடு வாழ் உசன் மக்களே இந்த வருடம் உங்கள் கனடாப் பயணத்தில் இந்த நிகழ்வையும் உள்ளடக்குங்கள். உங்கள் உறவுகள் பலரையும் ஒரே நாளில், ஒரே இடத்தில் சந்திக்க இதைவிடச் சிறந்த வழி வேறில்லை.

வாருங்கள், வாருங்கள், மகிழ்ந்திருக்க வாருங்கள்!

செயலாளர்
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா.


Sunday, February 9, 2014

உசன் உறவுகள் 2012 - பதிவு 3

கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் டொராண்டோவில் நடாத்தும் வருடாந்த குளிர்கால ஒன்றுகூடல் நிகழ்வான" உசன் உறவுகள் 2012"
நிகழ்வில் கனடா வாழ் இளம் சமுதாயத்தினர் ஆர்வமுடன் கலைநிகழ்வுகளை வழங்கினர் அதில் சில பதிவுகள்
பதிவு 3



Saturday, February 1, 2014

உசன் உறவுகள் 2012-

கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் டொராண்டோவில் நடாத்தும் வருடாந்த குளிர்கால ஒன்றுகூடல் நிகழ்வான" உசன் உறவுகள் 2012"
நிகழ்வில் கனடா வாழ் இளம் சமுதாயத்தினர் ஆர்வமுடன் கலைநிகழ்வுகளை வழங்கினர் அதில் சில பதிவுகள்