அனைத்துலக உசன் மக்களுக்கும் !!!!!!!!!!
ஆற்றல் மிக்க - நடைமுறை சாத்தியமான - நேர்த்தியான ஊழல் அற்ற செயற்பாடுகளை சமூகத்துக்கு வழங்குவதில் காட்டப்படும் அக்கறை காரணமாக தலை சிறந்த முன்னனி நிலையை எட்டினோம். தங்களின் தொடர்ச்சியான ஊக்குவிப்பும் ஆதரவும் மிகச்சிறந்த அமைப்பாக பரிணமிப்பதற்கு எடுத்துக்கொண்ட பிரயத்தனங்களுக்கு ஊன்றுகோலாகவும் பேருதவியாகவும் அமைந்தது. ஒன்றினைந்ததன் மூலம் நாம் மிக அதிகமானவற்றை சாதித்துள்ளதுடன் எமது பாரம்பரியங்கள், விழுமியங்கள் என்பவற்றை விழிப்புடன் பேணும் அதேவேளை எதிர்காலத்தில் நாம் சந்திக்கவிருக்கும் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் விதத்தில் தொடர்ந்து முன்னேறுவோம் தாங்கள் எமக்கு அளித்துவரும் பொறுப்புக்களை உறுதியுடனும், நேர்மையுடனும், பொறுப்புடனும் செய்வோமென திடமாக நம்புகின்றோம்.
மனதில் இடம் பெறுதல் என்பது பிறவியல்புகளை எல்லாம் தாண்டிய அக அழகின் பரிசு. மனிதனுக்கு மனிதனுடன் மட்டும் அன்றி பிற உயிரினங்களோடும் பாவனை பொருட்களோடும், குறித்த ஸ்தலங்களோடும், இன்ன பிற விடயங்களோடும் ஆத்மார்த்த தொடர்பொன்றை தோற்றுவிக்கும் பிணைப்பு அது தொடர்புறும் பதார்த்தங்கள் மாறுபடுகையில் அந்த உறவுகளுக்கான பெயர்களும் மாறுபடுவது மட்டுமே அன்றி வேறெந்த பெரியதொரு வித்தியாசமும் இணைப்புக்களுக்கிடையில் இருந்ததேயில்லை. மனங்களை வெல்லமுடியாத மன்னனுக்கு மக்களிடத்தில் மதிப்பிருப்பதில்லை மண்ணை வெல்லமுடியாத விதைக்கு பயிர் என்ற பெருமை கிடைப்பதில்லை. புன்னுயிர்களிருந்து பேருயிர்கள் கடந்து பகுத்துயிர்கள் வரை இன்னொரு மனதை வெற்றி கொண்டருளுவது என்பது இலேசுப்பட்ட விடயமொன்றல்ல.
கழகத்தின் உயிர்ப்பின் நோக்கமும் - இயக்கத்தின் விசையும் – வீச்சும் - பொறுப்பும் அவற்றின் பாற்பட்ட சேவையும் ஊரின் தேவையை முன்னிறுத்தி தளராத உணர்வுடன் ஆற்றப்படுபவையே. ஊரின் தேவைகள் நோக்கியும், அதன் அபிவிருத்தி சார் மேம்பாடுகள் கருதியும் உழைப்பதே தனது உன்னதபணி அந்தபணியே தனது உயர்வின் உந்து சக்தி என்பதை நாம் மறந்ததில்லை - மறப்பதற்குமில்லை.
எனவே ஊர் நலன் சார் செயற்பாடுகளை விரிவுபடுத்துவதை நோக்காக கொண்டும், இன்றைய உலக சுழற்சியில் தன்னையும் இணைத்துக் கொள்வதை கருத்தில் கொண்டும், புலம் பெயர் உசன் வாழ் மக்களை நினைவில் நிறுத்தியும், ஓர் ஒன்றினைந்த உயர்வான சேவையை எதிர்பார்க்கும் மக்களுக்கு அதனை நனவாக்கும் பொருட்டும், தொடர்பாடலின் முக்கியத்துவத்தை மனதில் கொண்டும் எமது பணி சிறக்க ஊர் மகிழ செயற்றிறனை விரிவுபடுத்துவதன் ஓர் அங்கமே மேற்படி எமது இணைவு. ஆதலால் தங்களின் உயர்ந்த பட்ச ஆதரவே அதன் நீட்சியை நோக்கி மேலும் வளர துடிப்புடன் காத்திருக்கும் என்றென்றும் உங்களுடன் உங்களுக்காகவே தம்மை அர்பணித்திருக்கும்.
சிறி முருகன் விளையாட்டுக்கழகம்
உசன்
"காலத்தே செய்யும் பணியே காலத்தை கடந்து நிற்கும்
காலத்தையும் உருவாக்கிவிடும்"
நன்றி