அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Wednesday, June 5, 2013

உங்களோடு நாங்கள்...........



மதிப்புக்குரிய உசன் மக்களே!

"பண்டிதர் சரவணமுத்து பொது நூலகம்" இதுவரை இயங்க ஆரம்பிக்காமல் இருப்பது குறித்தும், உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா குறித்தும் முகநூல் பக்கமொன்றில் எழுதப்பட்டிருப்பது, ஒன்றியத்தின் செயலாளர் என்ற வகையில் எனது கவனத்துக்குக் கொண்டுரப்பட்டுள்ளது. பொதுத் தளமொன்றில் எழுதுவதற்கு முன்னால் எழுதப்படும் விடயம் குறித்து சம்பந்தப்பட்டவர்களோடு தொடர்பு கொண்டு விபரம் சேகரிக்க வேண்டும் என்ற ஊடக தர்மம் கூடத் தெரியாத, முகத்தை மறைக்கும் ஒருவரின் கருத்துக்குப் பதில் எழுதும் அவசியம் ஒன்றியத்திற்கு இல்லை. ஆனால் இந்த ஆக்கம் மக்களைக் குழப்பும் ஒரு நோக்கத்தோடு எழுதப்பட்டிருப்பதுபோல் கருதப்படுவதால் மக்களுக்கு விளக்கமளிக்கும் கடமை ஒன்றியத்துக்கு இருக்கிறது.

"பண்டிதர் சரவணமுத்து பொது நூலகம்" இதுவரை இயங்க ஆரம்பிக்காமல் இருப்பதற்கான மூலகாரணம் நிதிப் பற்றாக்குறையே தவிர நிர்வாகத்தினதோ அன்றி ஒன்றியத்தினதோ "கையாலாகத்தனம்" அல்ல. நிதி சேகரிப்பு முயற்சிகள் நடந்துகொடிருக்கின்றன. நாங்கள் விரும்பும் அளவுக்கு வேகமாக செயற்பட முடியவில்லை என்பதில் எங்களுக்கும் கவலைதான். இந்த முயற்சிக்கு நிதி தந்து உதவக்கூடியவர்களை ஒன்றியத்தோடு தொடர்பு கொள்ளுமாறு அன்போடு வேண்டுகிறோம்.

குருக்கள் வீட்டினை மீட்டுத்தரவில்லையென ஒன்றியத்தினர் முன்னர் கூறியதாக எழுதப்பட்டிருப்பது முற்றிலும் தவறானது. ஒன்றியத்திற்கும் மதிப்புக்குரிய குருக்கள் அவர்களுக்குமிடையே இருக்கும் நல்லுறவைக் குலைக்கும் நோக்கோடு இப்படி எழுதப்பட்டுள்ளது என்றே இதை நாம் பார்க்கிறோம்.

தெரிவு செய்யப்பட்ட போசகர்களும், நிர்வாகமும் என்ன செய்கிறது என்று கேட்கப்படிருக்கிறது. அவர்கள் தங்கள் பங்கைச் செவனே செய்துகொண்டிருக்கிறார்கள். கிடைக்கும் சொற்ப நேரத்திலும் ஊரின் வளர்ச்சியில் அக்கறையோடு ஈடுபடும் இவர்களுக்கு ஒன்றியம் இந்த நேரத்தில் பகிரங்கமாக நன்றி தெரிவித்துக்கொள்கிறது. ஒன்றியமும் மௌனமாக இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நூலக முயற்சியில் அக்கறையுள்ள அனேகமாநோருக்கும் ஒன்றியம் என்ன செய்கிறது என்று நன்றாகவே தெரியும். ஒன்றியத்துக்கும், அதனைச் சார்ந்தோருக்கும் அவதூறு விளைவிக்க முயற்சிப்பவர்களுக்கு என்ன சொல்லியும் பயனில்லை.

வெற்றி அஜந்தன் பணம் அனுப்பியிருப்பதாக எழுதப்பட்டிருப்பது நகைப்புக்கிடமானது. அது அவரின் தனிப்பட்ட பணம் அல்ல. மதிப்புக்குரிய வெற்றிவேலு அஜந்தன் ஒன்றியத்தின் பொருளாளர் என்ற முறையிலேயே அந்தப் பணத்தை அனுப்பிவைத்தார். அஜந்தனின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது மிகவும் கண்டிக்கப்பட வேண்டியது. இது அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி, அவரை இந்த முயற்சிகளில் இருந்து விலகச் செய்து ஊரின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்துவதை நோக்கமாகக் கொண்டு எழுதப்பட்டதாகவே நாம் கருதுகிறோம். இதனை ஒன்றியம் வன்மையாகக் கண்டிக்கிறது. சூரியனைப் பார்த்து நாய் குரைப்பதால் அந்தச் சூரியன் மறைந்து போவதில்லை.

இந்த ஒன்றியம் கனடா வாழ் உசன் மக்களால் தெரிவு செய்யப்பட்டு கனடா அரசில் பதிவு செய்யப்பட்ட ஒன்று. வருடா வருடம் இந்த ஒன்றியத்தின் வரவு செலவு விபரங்கள் அரசுக்குச் சமர்ப்பிக்கப்படுகின்றன. ஒன்றியத்தின் நிர்வாக சபையே அனைத்து முடிவுகளையும் எடுக்கின்றது. இந்த நிலையில் அஜந்தன் அடுத்தவர்களின் மூளையைச் சலவை செய்து, பணம் தேவை என்றவுடன் அனுப்பி வைக்கிறார் என்று எழுதியிருப்பது மிகவும் தவறான ஒரு விடயம். இது ஒன்றியத்தின் கோரிக்கைகளுக்கு செவிசாய்ப்பவர்களை மூளை இல்லாதவர்கள் என்று கூறிக் கேவலப்படுத்தும் ஒரு நடவடிக்கை.

உசன் சரவணமுத்து நூலக நிர்வாகத்தினர் மற்றும் போசகர்களுடன் தொடர்பு கொண்டு செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தவில்லை என்ற பொருள்பட எழுதப்பட்டுள்ளது. இதை எழுதியவர் இந்த முடிவுக்கு வர என்ன காரணம் என்று எமக்குத் தெரியவில்லை. ஏனெனில் அவர்கள் மூலமாகவே அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

எமது அன்பான உசன் மக்களே,
நாம் எம்மால் முடிந்தவரை உங்களின் ஒத்துழைப்போடு உசனின் வளர்ச்சிக்கு முயற்சிப்போம். நீங்களும் இப்படியான குழப்பவாதிகளுக்கு இடமளியாமல், தகவல்களைச் சரியான இடங்களில் இருந்து பெற்று, உசனின் வளர்ச்சிக்கு உதவுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி.

உங்கள் உண்மையுள்ள,
சுப்பிரமணியம் பாஸ்கரன்
செயலாளர், உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா