அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Saturday, November 10, 2012

உசன் இராமநாதன் மகா வித்தியாலயம்



1924 ம் ஆண்டின் முன்புள்ள காலப்பகுதியில் உசனைச் சேர்ந்த சைவ மக்கள் கற்றுவந்த ஒரேயொரு பாடசாலை மிருசுவில் ரோமன் கத்தோலிக்க பாடசாலையே அதனால் மக்களின் செல்வாக்கும் மதிப்பும் பெற்றவர்களான வைப் பெரியார் உசன் திரு. வி. வைத்திலிங்கம் திரு. பெ. இராமநாதன் மற்றும் பெரியார்களும் ஒன்று சேர்ந்து உசனில் ஒரு சைவ பாடசாலையை நிறுவ வேண்டும் என்று தீர்மானித்து உசன் கந்தசாமி கோவில் தர்மகத்தா திரு. வி. வைத்திலிங்கம் அவர்களின் ஒத்துழைப்புடன் கோவிலுக்கு அருகாமையிலுள்ள மடத்தில் கல்வி கற்க ஒழுங்கு செய்தனர்.


மிருசுவில் வடக்கைச் சேர்ந்த திரு.க.பொன்னையாப்பிள்ளையும் அவரது மனைவியுமாக வகுப்புக்களை ஆரம்பித்து நடாத்தினர். அவர்களது தராதரம் போதாமையால் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த திரு.இராசையாவும் அவரது தாயாருமாக கல்வி கற்பித்தனர். இவர்களது காலத்தில் மாணவர் தொகை 35-40 ஆகும். இதே காலத்தில் அச்சுவேலியைச் சேர்ந்த திரு.செல்லத்துரை என்பவரையும் நியமித்து திருமுறைகளையும் புராணத்தையும் போதித்தனர்.
கல்விப்போதனை புரண தரத்தில் இல்லாத காரணத்தால் ஆலய தர்மகத்தா ஆகிய திரு.வைத்திலிங்கம் அவர்களும் திரு.பெ. இராமநாதன் அவர்களும் மற்றும் சைவப் பெரியார்களுமாக சேர்.பொன். இராமநாதன் அவர்களை 1924ம் ஆண்டு சந்தித்து உசனில் ஒரு சைவப் பாடசாலையை ஆரம்பிக்க வேண்டிய அவசியத்தை எடுத்துக்கூறி பாடசாலை ஒன்றை நிறுவும் படி வேண்டுகோள் விடுத்தனர். அவர்களது வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட சேர். பொன். இராமநாதன் அவர்கள் உசன் பதிக்கு வருகை தந்து பாடசாலை நிறுவ வேண்டிய காணியையும் பார்வையிட்டபின் கட்டிட வேலை ஆரம்பிக்கப் பட்டது. 1927ம் ஆண்டு கட்டிட வேலைகள் பூர்த்தியடைந்தன.
1927ம் ஆண்டு சேர்.பொன். இராமநாதன் அவர்கள் தமது குடும்பத்துடன் வருகை தந்து உசன் சேர்.பொன். இராமநாதன் தலைமையில் நடைபெற்ற விழாவில் வைபவ ரீதியாக திறந்து வைத்தார். பரமேஸ்வராக் கல்லுரி நிறுவனத்துடன் இப்பாடசாலை இணைக்கப்பட்டு திரு.பெ.இராமநாதன் அவர்கள் உள்ளுர் முகாமையாளராக நியமிக்கப்பட்டார். முறைப்படியான தலைமை ஆசிரியராக திரு.முத்துக்குமாரசாமி ஐயா அவர்கள் நியமிக்கப்பட்டார். சில மாதங்கள் கடந்தபின் அவருடைய இடத்தில் திரு. சரவணமுத்து அவர்கள் தலைமை ஆசிரியராகவும், திரு.சபாபதிப்பிள்ளை திரு.இளையதம்பிப்பிள்ளை என்போர் உதவி ஆசிரியராகவும் கடமையாற்றினார்.
1931ம் ஆண்டில் இவர்கள் மாற்றமாகிப் போக நாகர் கோவிலைச் சேர்ந்த உசனில் வாழ்ந்த திரு.மு.சி.சிற்றம்பலம் அவர்கள் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்றர். உசன் பதியைச் சேர்ந்த திரு. த. சரவணமுத்து, கல்வயல்ப் பண்டிதர், திரு. க. வேலுப்பிள்ளை, பண்டிதர் இடைக்காடு திரு. க. சிதம்பரப்பிள்ளை, மிருசுவில் திருமதி. ஞானம்மா ஆகிய நால்வர் உதவி ஆசிரியர்களாகவும் கடமை ஏற்றார்கள்.
திரு. மு. சிற்றம்பலம் அவர்கள் கடமை ஏற்ற 1931ம் ஆண்டிலிருந்து அவர் இளைப்பாறிய காலமாகிய 14.05.1963 வரையான 32 வருடங்கள் உசன் சைவ வித்தியசாலையின் வரலாற்றின் பொற்காலமாகும். அவருடைய சேவைக் காலத்தில் ஆரம்பப் பாடசாலை என்ற தரம் மாறி கனிஸ்ட பாடசாலையாகவும் 1940ம் ஆண்டில் சிரேஸ்டப் பாடசாலையாகவும் தரமுயர்ந்தது. அவர் இளைப்பாறிய காலத்தில் G.C.E(A/L) வகுப்பு வரையுமுள்ள வித்தியாலயமாகத் தரம் உயர்ந்தது. பிரதான மண்டபம் ஒன்றிலேயே இயங்கி வந்த வித்தியாலயத்தில் இடப்பற்றாக்குறை காரணமாக இரண்டு புதிய கட்டடங்கள் நிறுவப்பட்டன. உசன் இராமநாதன் குடும்பத்தினரால் விளையாட்டு மைதானத்திற்குரிய நிலமும் நன்கொடையாக வழங்கப்பட்டது.
1960.12.01 அன்று இப்பாடசாலையை அரசாங்கம் சுவீகரித்த பின் 1963ம் ஆண்டில் மகா வித்தியாலயமாகத் தரமுயர்ந்தது. 1963.05.01 அன்று திரு. மு. சிற்றம்பலம் அவர்கள் இளைப்பாற திரு. ம. சத்தியமூர்த்தி அவர்கள் பதில் அதிபராகக் கடைமை ஏற்றார். அவரைத் தொடர்ந்து திரு. இ. கனகலிங்கம், திரு. சி. சிவப்பிரகாசம், திரு. வி. கே. நடராசா, திரு. சி. சிவசரவனபவன், திரு. க. சிவபாதசுந்தரம், திரு. கே. பேரம்பலம், திரு. ஐ. வரதராசா, திரு. செ. சுப்பிரமணியம் ஆகிய 12 அதிபர்கள் சிறப்பாகக் கடமையாற்றினார்கள்.
2004ம் ஆண்டிலிருந்து திரு.ந.நவரத்தினராசா அவர்கள் சிறந்த அதிபராகக் கடமையாற்றினார். 02.04.2008 ம் ஆண்டிலிருந்து திரு.சி.மனோகரன் அவர்கள் சிறந்த அதிபராகக் கடமையாற்றிக் கொண்டிருக்கிறார்.