அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Friday, March 25, 2011

கஜகேணிப் பிள்ளையார் கோவில் வரலாறு


திருவாக்கும் செய் கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் 
உருவாக்கும் ஆதலால் வானோர்
ஆனைமுகத்தானை காதலால் கூப்புவர் தம்கை.

தென்னஞ் சோலைகளும், முக்கனி மரங்களும் விளை நிலங்களும் நிறைந்து இயற்கை வனப்புடன் காட்சி தரும் உசன் கிராமம் தென்மராட்சியில் அமைந்துள்ளது.  ஆன்மீக நெறியும் தெய்வ வழிபாடும் தழைத்து ஓங்க ஆலயங்களும், அறிவுக் கலையும் அதன் பயன்பாடும் பரந்து பட பணியாற்றும் வித்தியாலயங்களும் அமையப் பெற்றது உசன் கிராமம்.  இவ்வாலயங்களும் வித்தியாலயங்களும் வெவ்வேறு சரித்திரங்களுடனேயே தோன்றின என்பது வரலாறு.

இந்த வகையில் கஜகேணிப் பிள்ளையாரின் சரித்திரத்தைக் கவனித்தால், தற்போது தீர்த்தக்குளம் எனக் கருதப்படும் கேணியில் யானைகள் வந்து நீராடிச் செல்லும் சம்பவம் ஒன்றினாலேயே கஜகேணி என்ற நாமம் சூட்டப்பட்டதாக தர்மகர்த்தாக்களாக இருந்த மூதாதையர் கூறிச் சென்றனர்.  பிள்ளையாருக்கு கஜமுகன் என்றும் வேதங்களும் புராணங்களும் கூறுகின்றன.  கஜமுகன் என்பது யானை முகத்தை உடையவர் என்பது பொருள்.

ஆகவே யானைகள் வந்து தீர்த்தக் கேணியில் நீராடிச் செல்வதனால் யானையையும் கேணியையும் சம்பந்தப்படுத்தி கஜகேணிப் பிள்ளையார் எனக் கூறி வணங்கி வந்தனர்.  இதற்கு மேலாக வேறு சரித்திரங்கள் யாரிடமாவது இருக்குமாயின் அவற்றை ஆதாரங்களுடன் தெரிவித்தால் இவ்விபரங்களுடன் இணைத்துக் கொள்ளலாம்.

கஜகேணிப் பிள்ளையாரின் சில அற்புதங்களை தர்மகர்த்தாக்களாக இருந்த இருக்கின்றவர்கள் கூறியதை மக்களுக்கு அறிய வைப்பது மக்களுக்கும் கோவிலுக்கும் பயன் உள்ளதாக அமையும் எனக் கருதப்படுகிறது.  ஒரு சமயம் இவ்வாலயத்துக்கு முற்பக்கமாக இருக்கும் காணியில் இருந்த தென்னை மரத்தில் அபிடேகத்திற்காக இளநீர் பறிக்க ஏறியவர் மரத்தில் இருந்து தவறி விழும் போது “பிள்ளையாரே” என்று கதறிய போது உயிர் ஆபத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ளப்பட்டார்.  அன்றிரவு தர்மகர்த்தாவுக்கு சொர்ப்பனத்தில் தோன்றி தன் உடல் வலிக்கு சுடுநீரில் நீராட்டும் படி கேட்டுக் கொண்டதாக தர்மகர்த்தாகளில் ஒருவரான அமரர் விசுவநாதனின் தகப்பனார் வினாசித்தம்பி கூறிச்சென்றுள்ளார்.  இதே போன்று கோவில் பொருட்களைத் திருடிய ஒருவன் கம்பி வேலியில் மாட்டிக் கொண்டதும்  கண் பார்வை இழந்ததை அமரர் விஸ்வநாதர் கூறிச் சென்றுள்ளார்.  கடைசியாக இற்றைக்கு 25 வருடங்கட்கு முன் தர்மகர்த்தாக்களில் ஒருவரான திரு. சு. சிவபாதசுந்தரம் தனது நேர்த்திக்கடனை நிறைவேற்றும் நோக்கத்துடன் சென்ற சமயம் இந்திய அமைதிப்படை கோவிலில் ஆயுத சோதனைக்காக இவருடன் இணைந்து கொண்டனர்.  கோவிலைச் சென்று அடைந்ததும் வாயிலில் நின்று கடமையில் இருந்த பூசகரை அழைத்தனர்.  கோவில் உள்ளே இருந்த கேதீஸ்வர சர்மாவும்இ ஐயாத்துரை சர்மாவும் வாயிலுக்கு வந்தனர்.  திரு. சு. சிவபாதசுந்தரம் படையினர் வந்த நோக்கத்தைத் தெரிவித்தார்.  கேதீஸ்வர சர்மா தனது பார்வையை மேல் நோக்கி செலுத்தினார்.  அங்கே கூரையில் நாகபாம்பு படம் எடுத்தபடி இருப்பதைக் கண்டு அதனை படையினருக்கு காட்டினார்.  படையினர் வந்த நோக்கத்தையும் கைவிட்டு பாம்பை வணங்கிவிட்டு திரும்பிச் சென்றனர்.  இவ்வாறாக கஜகேணி கஜமுகன் தனது அற்புதங்களை காலத்திற்குக் காலம் மக்களுக்கு காட்டிக் கொண்டே இருக்கிறார்.

மக்கள் அன்று தொட்டு பக்தியும் பெரும் நம்பிக்கையும் வைத்து வாழ்ந்து வந்தார்கள் என்பதற்கு இன்றும் பல நடைமுறைகள் சான்று பகருகின்றன.  ஒரு தாய்க்கு மகப்பேறு கிடைக்கும் சந்தர்ப்பத்தில் அந்தப் பிள்ளையை வெளி உலகிற்கு எடுத்துச் செல்ல முன் முதன் முதலாக கஜகேணிப் பிள்ளையாரிடம் சென்று வணங்கிய பின்பே அக்குழந்தை வெளி உலகை காண்கிறது.  அதே போன்று ஒரு பசு கன்று பிரசவித்தபின் அப்பசுவின் பால் முதல் முதலாக கஜகேணிப் பிள்ளையாருக்கு அபிஷேகம் செய்த பின்பே மறு தேவைகளுக்கு எடுக்கப்படுகின்றது.

மேலும் விரிவு படுத்திக் கூறுவதானால் விளை நிலங்களில் இருந்து கிடைக்கும் தானிய வகைகள் முதலில் கஜகேணி பிள்ளையாருக்கு அபிஷேகித்த பின்பே மக்கள் பாவனைக்கு எடுக்கப் படுகின்றது.  ஒருபெண்ணும் ஆணும் வாழ்க்கையில் திருமணம் என்ற முறையில் இணைந்து கொண்டால் முதலில் கஜகேணிப் பிள்ளையாரை இருவரும் இணைந்து வணங்கிய பின்பே அயலவர் சுற்றத்தவர் இல்லங்கட்கு வருகை தருகிறார்கள்.  ஆகவே மக்கள் அன்று தொட்டு இன்று வரை கஜகேணிப் பிள்ளையாரை முன்வைத்தே எல்லா நடவடிக்கைகளையும் ஆரம்பிக்கிறார்கள் என்பது வெள்ளிடைமலை.கஜகேணி ஆலயத்தில் பூசைகள் யாவும் வேதாகம முறைப்படி நடைபெற்று வருகின்றது. பிள்ளையாருக்குரிய முக்கிய   தினங்களில் அபிஷேகம் பூசைகள் யாவும் மக்களாலும் தர்மகர்த்தாக்களாலும் மேற் கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


கானகத்தின நடுவே காட்சிதரும் கஜமுகனை
கைகூப்பி தொழுவார்க்குகடுவினை அகலுமே.


தர்மகர்த்தாக்கள்
தரவு:திரு.சு.சிவபாதசுந்தரம் - கனடா
தட்டச்சு வினோதா மகேஸ்வரன்