யாழ் குடாநாட்டில் பாதுகாப்புத் தேவைகளுக்காக ஏற்னவே மேற்கொள்ளப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை பொதுமக்களது வசதி கருதி நீக்குவது, தளர்த்துவது மற்றும் குறைப்பது குறித்து வடமாகாண ஆளுனர் மேஜர் ஜீ.ஏ.சந்திரசிறியுடனான சந்திப்பின்போது இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை நடைபெற்ற ஆளுனருடனான சந்திப்பின்போது, யாழ். அரசாங்க அதிபர் கே. கணேஷ், டக்ளஸ் மற்றும் பொது மக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர். பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்துவதற்காக 79 கோரிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டு முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஈ.பி.டி.பி. விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதனன்று யாழ் நூலகக் கட்டிடத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலின் போது, தீவகப் பகுதி உட்பட யாழ் பிரதேச மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது. இவற்றில் சில முக்கிய விடயங்கள் பற்றி, விரைவில் யாழ் கடற்படை கட்டளைத் தளபதியுடன் கலந்துரையாடுவதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இக் கலந்துரையாடலின் பிரகாரம், குடாநாட்டில் இணக்கம் காணப்பட்டுள்ள பொதுமக்களின் கோரிக்கைகள்
*கச்சாய் துறைமுக வீதியிலுள்ள விளையாட்டு மைதானத்தை பொதுமக்கள் பாவனைக்காகத் திறத்தல்
*கொடிகாமம் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாகவுள்ள கச்சாய் பாதையோர முட்கம்பிகளை அகற்றல்.
*உசன் - கெற்பேலி வீதியை மக்கள் போக்குவரத்திற்காகத் திறத்தல்
*உசன் இராமநாதன் கல்லூரிக்குரிய காணியை விடுவித்தல்,
கரம்பகம், எழுதுமட்டுவாழ், ஒட்டுவெளி, நாகர்கோவில், மருதங்கேணி ஆகிய பகுதிகளில் கண்ணிவெடிகள் உடன் அகற்றப்பட்டு மக்களை மீள்குடியேற்றுதல்
என்பனவற்றுக்குகான இணக்கம் காணப்பட்டது .